என்ன செய்திருக்கமுடியும்?

நெஞ்சைப் பிழியும் சோகக்காட்சிகள்... பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சுனாமி அலைகள் வந்து நம் எழில் கொஞ்சும் கடற்கரையோரங்களில் உழன்ற பெரும்பாலும் ஏழை மக்கள் பலரை அள்ளிக்கொண்டு போய்விட்டன. 'இரண்டு மணி நேரம் அவகாசம் இருந்தது. சுனாமியின் வரவை செயற்கைக்கோள் மூலம் அனுமானிக்க முடிந்திருக்கும், ஹவாய், ஜப்பான் போன்ற பகுதிகளில் இருப்பதைப் போன்ற எச்சரிக்கை அறிவிப்பு வசதி, தகுந்த முன்னேற்பாடு, பயிற்சி ஆகியவை இருந்திருந்தால் பெரும் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும்,' என்கின்றன பல செய்திகள். இங்கே தொழில்நுட்ப சாத்தியத்தை மட்டும் முன்னிறுத்தமுடியாது. பொருளாதார கணக்கையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும் நம் தெற்காசியாவைப்போன்ற சில்லரை விலையில் மனித உயிர்கள் மதிக்கப்படும் பகுதிகளில் இந்த கணக்கை யாராலும் தவிர்க்க முடியாது. உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்து பார்க்கலாம். இம்மாதிரி நிகழ்வுகள் நம் தெற்காசியக் கடற்கரைகளில் மிக மிக அரிதானவையே. ஒரு புயல், சூறாவளி போன்றவற்றோடு சுனாமியை ஒப்புநோக்கியதில் எனக்கு தோன்றியது இது.

இதைத்தவிர்க்க ஒரு ஏற்பாட்டைக் கற்பனை செய்கிறேன்:
- நிலவியல், கடலியல், விண்வெளியியல், தொலைஉணர்வியல் போன்ற பல அறிவியல் துறைகளில் இன்னும் சுனாமி பற்றிய நுட்பங்களை மேம்படுத்தல்
- ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று கடற்கரைப்பகுதியில் உறையும், உலவும் மக்களுக்கு கல்வி, பயிற்சி, அதை அவ்வப்போது தணிக்கை சோதனை செய்தல் போன்ற ஏற்பாடுகள்.
- காப்பாற்றல்/நிவாரண பணிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு சாதனங்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், போன்றவை
- இன்னும் இதைப்போன்ற பல அடிப்படைக் கட்டுமானங்கள், துறை நிபுணர்களின் ஆய்வாலும், ஹவாய்/ஜப்பான் போன்ற பகுதியினரின் அனுபவத்தாலும் அமைக்கப்படக்கூடியவை.

இவை அனைத்துமே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீள கடற்கரையுள்ள நம் தெற்காசிய ஏழை(?) நாடுகளுக்கு பெரும் சவால் என்பதில் ஐயமில்லை.

இறைவன் சித்தத்தில் இன்னுமொருமுறை இதுமாதிரி நிகழக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அதே தருணத்தில், இத்தகைய ஒன்று இன்னொரு முறை இன்னொரு 10 ஆண்டுகள் கழித்து நடப்பதாக ஒரு பேச்சுக்குக் கொள்வோம். இப்படி எதையாவது அனுமானிக்காமல் முன்னேற்பாடுகள் எதையும் திட்டமிடமுடியாதே. இந்த 10 வருடம் என்பதே மிகவும் குறைவு என்பது கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் தகவல்.

ஒருவேளை பெரும் முயற்சியில் இந்தச் சவாலை ஏற்று மேற்சொன்ன ஏற்பாடுகள் அமைக்கப்பட்டாலும், ஒரு 10-20 வருடத்துக்கு ஒரு சுனாமியும் நிகழாமல் இருந்தும், இந்த ஏற்பாடுகளுக்காக நம்மால் தொடர்ந்து செலவு செய்துகொண்டிருக்கமுடியுமா?

மாறாக, மாதம் மும்மாரிபோல் பெய்யும் ரயில் விபத்துக்கள், பட்டாசுத் தொழிலோ, பள்ளியோ, கல்யாண மண்டபமோ, திரையரங்கோ, பலர் கூடும் எங்கோ ஒரு இடத்தில் தொடர்ந்து நடந்து வரும் தீவிபத்துக்கள், இவற்றை சுனாமியோடு ஒப்புநோக்கிப் பார்த்தால் சிக்கனமாக, சுலமான தொழில்நுட்பத்துடன், கடுமையான விதிமுறைகள் அமலாக்கத்தினால் செய்யமுடியும். அதற்கு தொடர்ந்து கைமேல் பலனும் கிட்டும். அதையே நம்மால் இன்னும் சரியாக செய்யமுடியவில்லையே. கும்பகோணம் பள்ளி விபத்துக்குப்பின், எத்தனை இடங்களில் தீயணைப்புக்கருவிகள், அவசர வழிகள், பயிற்சிகள், ஆகியவற்றில் கண்கூடான மாற்றத்தை செய்திருக்கிறோம்? இந்தியாவில் இருக்கும் நண்பர்களைக் கேட்கவேண்டும்.

அவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், உண்மையில் 'இந்த எல்லையில்லா அண்டத்தில் மனிதன் ஒரு தூசிதான்' என்பதை இன்னொருமுறை உணர வைக்கவே இந்த சுனாமி, என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்குமேல் எதுவும் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.

பெருமுச்சுடன், இன்னுமொரு முறை தங்கள் சொந்தங்களை இழந்து அரற்றும் சகோதரர்களுக்கு என் அனுதாபங்கள்.

[மூன்று நாட்களாக ஊரில் இல்லை. காலையில் கிளம்பும் போது சுரத்துடன் சிரமப்பட்ட மகளுடன் 400 மைல் காரில் பயணித்து வந்து (இடையில் பனிப்பொழிவால் தாமதம் வேறு) இப்போதுதான் நிகழ்வின் முழு வீச்சைப் புரிந்துகொள்கிறேன். பாஸ்டன் பாலாஜி தொலைபேசியில் தகவல் சொல்லியிருந்தார். ஆனலும் இப்போதுதான் சோகத்தின் முழுத்தாக்கம் விளங்குகிறது. ஹும்.

கருத்துரையிடுக

 
Top